ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி - 50 மாத சம்பளத்தை போனஸாக அள்ளி வழங்கிய நிறுவனம்
தாய்வானில் உள்ள தனியார் போக்குவரத்து நிறுவனம், தனது ஊழியர்களில் சிலருக்கு 50 மாத சம்பளத்தை போனஸாக வழங்கி அதன் சிறப்பான ஆண்டைக் கொண்டாடுகிறது.
தைபேயை தளமாகக் கொண்ட ஷிப்பிங் நிறுவனமான எவகிரீன் மரைன் கோப்பரேஷன், ஆண்டு இறுதி போனஸை 50 மாத சம்பளத்திற்கு சமமாக அல்லது சராசரியாக 4 ஆண்டுகளுக்கும் மேலான ஊதியத்தை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பணியாளரின் வேலை தரம் மற்றும் செயல்பாட்டைப் பொறுத்து அளவு மாறுபடும் மற்றும் தாய்வான் சார்ந்த ஒப்பந்தங்களைக் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே அதிக போனஸ் பொருந்தும்.
ஊழியர்களின் தனிப்பட்ட செயல்திறன் போனஸ் பெற காரணம்
ஆண்டு இறுதி போனஸ் எப்போதும் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்று எவகிரீன் மரைன் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவகிரீன் மரைன் கோப்பரேஷன் மிகப்பாரிய நுகர்வோர் பொருட்கள் மற்றும் சரக்குகளுக்கான போக்குவரத்து நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 2022-ஆம் ஆண்டின் வருவாய் சாதனை 20.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2020-ஆம் ஆண்டின் வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
2021 இல் செய்திகளில் இடம்பிடித்த எவகிரீன்
எவகிரீன் மரைன், 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து தவறான காரணங்களுக்காகவும் செய்திகளில் வலம் வந்தது. அதன் கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த நிறுவனம் 52 மாத சம்பளம் வரை போனஸை வழங்கியதாக தைபேயின் எக்கொனமிக் டெய்லி நியூஸ் கடந்த வாரம் தெரிவித்தது.
சில ஊழியர்கள் டிசம்பர் 30 அன்று 65,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் பெற்றனர் என கூறப்படுகிறது.
எல்லா எவகிரீன் மரைனின் ஊழியர்களும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. ஷாங்காயை தளமாகக் கொண்ட அதன் ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தை விட ஐந்து முதல் எட்டு மடங்கு வரை போனஸ் பெற்ற பிறகு நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக புகார் அளித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
