தமிழரசுக் கட்சியில் மீண்டும் ஒரு வாக்கெடுப்பு: சிறிநேசன் ஆணித்தரம்
மீண்டும் ஒரு பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்காக போட்டியிட்டவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்றைய தினம்(28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மாநாடு
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதனை கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தால் நிச்சயமாக இன்று 2024.01.28 ஆம் திகதி எமது கட்சியின் மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும்.
ஆனால் பொதுச் செயலாளர் தெரிவில் தமக்கு இணக்கமில்லை என கட்சியிலுள்ள பலர் சுட்டிக் காட்டியிருந்தார்கள், இதனை எமது கட்சியின் புதிய தலைவரிடமும் பழைய தலைவரிடமும் கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்திருந்தார்கள்.
மீண்டும் வாக்கெடுப்பு
பொதுச் செயலாளர் தெரிவின்போது வாக்களிப்புக்கு அழைக்கப்படாதவர்கள், அங்கு உணவு பரிமாறியவர்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளார்கள், ஆகவே அந்த வாக்களிப்பு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.
எனவே மீண்டும் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம்”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |