தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ: கட்சி செயற்பாடுகளை முடக்க சதி
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் கட்சியின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலா நாசகார செயல் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பிரதேசசபை உறுப்பினர் சிவானந்தனின் வீட்டிற்கு நேற்றைய தினம் (19.10.2025) இரவு இனம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டு வீடு முற்றாக எரிந்துள்ள நிலையில் அதனை நேரில் சென்று பார்வையிட்ட செ. நிலாந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை இன்னும் நாசகார சாதிக் குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில், நாட்டில் இன்றுவரை வன்முறை சம்பவங்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக் கட்சி ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட இந்த நாட்டில் நடைபெற்ற பல்வேறு படுகொலை சம்பவங்களுக்கு எதிராக போராடி வரும் அதேவேளை ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல படுகொலைகள் குறித்த சாட்சியங்களை அரசுக்கு வழங்கியுள்ளது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் ஒருவர்.
இவ்வாறான சூழ்நிலைகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவருடைய வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது ஒரு நாசகார சதிச் செயல்.
எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
