தமிழினத்தின் இனவழிப்பு : பிரித்தானிய மன்னரிடம் கையளிக்கப்பட்ட கடிதம்
தன்னாட்சிக்கான எழுச்சிப் போராட்டத்தின் கொள்கைப் பிரகடனம் பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களுக்கான அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதமும் இதன் போது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொண்டாடப்படும் சுதந்திர நாள், தமிழ் மக்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் இறுதியில் கொள்கைப் பிரகடனம் மற்றும் கடிதத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக இளையோர் அமைப்பு, அனைத்துலக இராஜதந்திரக் கட்டமைப்பு மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் அவை சார்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த பிரகடனத்தையும் கடிதத்தையும் வழங்கியுள்ளது.
தமிழினத்தின் இனவழிப்பு
பிரித்தானிய அரசாட்சியில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவே தமிழினம் இன்று வரை சந்தித்து வரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனை வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டி, பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கான தமிழர் படை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடனான பேரெழுச்சியடன் கரிநாள் போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்த போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன் வானுயர ஒலித்திக் கொண்டிருந்த கொட்டொலிகள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் போராட்டம், பிரித்தானியப் பேரரசின் மன்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றடைந்தது.
மக்கள் போராட்டம்
இதன் போது, கட்டுப்படுத்த முடியாத மக்கள் வெள்ளத்துடன் பிரித்தானியக் காவல்துறை போராடியது.
தமிழர் தாயகத்தில் கரிநாளான நேற்றைய தினம், எழுச்சி கொண்ட மக்கள் போராட்டங்களை சிறிலங்கா அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும், தடைகளை உடைத்து போராட்டங்கள் நடைபெற்றுள்ள சூழலில், பிரித்தானிய மன்னரை நோக்கிய இந்த போராட்டம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |