பொதுமக்களுக்கான சேவையை நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை! வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் அதிக பங்களிப்பு வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (05) யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த ஐந்து வருடங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள், தரம் ஐந்து, சாதாரண மற்றும் உயர் தரங்களில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்
எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துளசேன விடயங்களை தெளிவுப்படுத்தினார்.
அதிபர் நியமனத்தில் எழுந்த சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றங்களில் காணப்படும் சிக்கல்கள், தளபாட வசதிகள் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது அவர் தெளிவுப்படுத்தினார்.
பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும்
மேலும், அரச சேவையில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும் என இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகஸ்தர்கள், மக்களுக்காகவே சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார், அத்துடன் மாகாணத்தில் ஆசிரியர், அதிபர்களின் வெற்றிடங்கள் காணப்படும் பகுதிகளுக்கு சென்று சேவை செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
அவர்கள் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் வடக்கு மாகாண கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |