தமிழீழ மாவீரர் பணிமனையால் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு
உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நேற்றையதினம்(16.11) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ மாவீரர் பணிமனையால் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது, பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, பிரித்தானியா மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
அக வணக்கத்தின் பின் பொது மாவீரருக்கான திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததினை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளும் மலர் வணக்கம் செய்தனர்.
மாவீரர் குடும்பங்களின் நலனுக்கான நிதி
நிகழ்வின் தொடர்ச்சியாக வரவேற்புரை, வரவேற்பு நடனம், மாவீரர் நினைவு நடனங்கள், மாவீரருடைய நினைவுப் பகிர்வுகள், மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வின் வரலாறு மற்றும் கவிதைகள் என ஆழமான கருத்துக்களுடன் மேடை நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வின் சிறப்பு அம்சமாக, மாவீரர் குடும்பங்களுக்கான நினைவுப் பொருட்கள் பகிரப்படாமல், அதற்காக செலவு செய்யப்பட வேண்டிய நிதியினையும் மேலதிக நிதிகளையும் சேர்த்து, தாயகத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களின் நலன் காக்கும் நோக்குடன் மாவீரர் பணிமனையால், மக்கள் நலன் காப்பகத்திடம் ஒரு தொகை நிதி கையளிக்கப்பட்டது.
தேசிய கொடி நாள்
அதேபோன்று எதிர்வரும் தமிழீழ தேசிய கொடி நாளினை ஒட்டி, ஏற்றப்பட இருக்கும் தேசிய கொடியினை நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவரும் தொட்டு ஆசீர்வதித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.

இக்கொடியானது எதிர்வரும் கொடி நாளில் லண்டன், ஸ்கோட்லேண்ட், லீவப்பூர் பகுதிகளில் ஏற்றப்பட்டு, மீண்டும் மாவீரர் நாள் அன்று (27.11) உலகத் தமிழர் வரலாற்று வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டு, அன்றைய தேசிய நாளின் தொடக்க நிகழ்வாக ஏற்றப்பட இருக்கின்றது.
முழுமையான விருந்தோம்பலுடன் நடத்தப்பட்ட இந்த அடையாள நிகழ்வில், பல நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.















செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்