பாரத தேசத்தின் நீதியோ சர்வதேசத்தின் கருணையோ இனியும் கிட்டாது - நாமே வென்றெடுப்போம்!
வடக்கு, கிழக்கு போதிய தொழிலும், வருமானமும் இன்றி வறுமை மிகுந்த ஒரு சமூகமாக புள்ளி விவரங்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதையையும், வன்முறையையும் கட்டுப்படுத்த முடியாத வகையில் சட்டத்தின் ஆட்சியும் தற்போது, செயலிழந்து இருக்கிறது.
ஆகமொத்தத்தில் அபிவிருத்திகள் எவையுமின்றி எல்லாவகையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தேசமாக தமிழர் தேசம் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கையறு நிலையிலும் தமிழ்த் தேசிய இனம் வாழ்வுரிமையை, சுயநிர்ணய உரித்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், சிங்கள பேரான்மை சக்திகளால் தமிழர் தேசம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் வகையிலும், ஈழத் தமிழர்களுக்கு பாரத தேசத்தின் நீதியோ, சர்வதேச சமூகத்தின் கருணையோ கிட்டவில்லை என்பதை இலங்கைத் தமிழரசு கட்சி மே நாளின் முதன்மைச் செய்தியாகப் பிரகடனப்படுத்தியிருந்தது.
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தின் மே தின நிகழ்வுகள், அடுத்த தலைமுறையை வழி நடத்திச் செல்லவுள்ள ஆயிரம் இளைஞர்களின் அணிதிரள்வுடன் நேற்றைய தினம் விமர்சையாக இடம்பெற்றது. இதன் போதே தமிழரசு கட்சியின் மே தின பிரகடனம் வெளியிடப்பட்டது.
அந்த பிரகடனத்தின் மூலம், அனைத்து வழிகளிலும் போராடி தமிழர்களின் தாகமாகிய சுயநிர்ணய உரிமையை அடைந்தே தீருவோமென திடசங்கற்பம் பூணப்பட்டுள்ளது.
பிரகடணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தேச விடுதலைக்காய் உயிர்த் தியாகம் செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறைகளின் மீதான சத்தியமாக இந்த இலட்சியப் பயணத்தைத் தொடர்வதே ஈழத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கு ஒரே வழிமுறையாகும்.
தமிழர் இருப்பை முற்று முழுதாக அழித்து ஒழித்து விட்டு பௌத்த கலாசாரத்தை திணிப்பதற்கான வலிமையான செயற்பாடுகள் சிங்கள தேசத்தினால் முனைப்புடன் செயலாற்றப்படும் நிலையில், வடக்கு, கிழக்கு தாயகம் அபகரிப்பும் பரந்துபட்ட அளவில் தொடர்ந்து வருகிறது.
திணிக்கப்படும் பௌத்த கலாசாரம்

இவ்வாறு, சிக்கல் நிறைந்த வலையென தமிழர் தேசத்தையும், தேசத்து தொழிலாளர்களையும் விசேடமாக தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையும் அழிக்கும் வகையில் பின்னப்பட்டுவரும் அதிகார சதி வலைக்கெதிராக போராடுவதே தமிழர் தேசத்துக்குள்ள ஒரே வழி.
இதேவேளை, புத்திபூர்வமான செயல்முறை ஊடாக தமிழ் மக்களின் உரித்துக்களைப் பேண அயல் அரசுகளும், பன்னாட்டு அரசுகளும் தவறியே வருகின்றன.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி, நாட்டை அதளபாதாளத்தை நோக்கி பயணப்படவைத்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசிய இனத்தின் பொருளாதார வளத்தையும், பொருளாதார மேம்பாட்டையும் சிதைத்து தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரித்துக்களை பூரணமாக பறிப்பதற்காக சிங்கள பேரான்மை திட்மிட்டு செயலாற்றி வருகிறது.
தமிழர் தாயக கனிய வளங்கள் கட்டற்று அள்ளிச் செல்லப்படுகின்றன, பயிர் விளையும் பல்லாயிரக் கணக்கான விளைநிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, தேசவழமைச் சட்டங்களை கௌரவிக்காத வகையில் அழகுத் தொழில் நிலையங்கள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன மற்றும் மூடப்பட்ட கைத்தொழிற்சாலைகள் மூடியபடியே உள்ளன.
சீரழியும் வாழ்வாதாரம்

அதுமட்டுமன்றி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உழைப்பாளர்களை இழந்து தீரா வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. நீண்டகாலமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளால் அவர்களது குடும்பங்கள் பொருளாதார அந்தரத்தில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளன. கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது.
ஆகவே, இங்கே கூடியிருக்கும் ஆயிரக் கணக்கான இளைஞர்களும் தந்தை செல்வா உணர்த்திய சுயாட்சி நோக்கிய பயணத்தை, ஒரு அஞ்சல் பரிமாற்ற போராட்டகாரர்களாக கையேற்க வேண்டும்.
எனவே இந்த மே நாள் பிரகடனத்தை ஏற்று, துணிந்து சென்றும் சாத்தியமான வழிமுறைகள் எல்லாவற்றிலும் போராடி தமிழர்களின் தாகமாகிய சுயநிர்ணய உரிமையை அடைந்தே தீருவோம்” என திடசங்கற்பம் பூணப்பட்டுள்ளது.