யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்: துணைத் தூதரகம் முன் பதற்ற சூழ்நிலை
யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை எதிர்த்து கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரம் முன் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடமாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கடற்றொழில்
யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று(மார்ச் 19) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் போராட்டம் இன்றும்(மார்ச் 20) தொடர்கின்றது.
போராட்டம்
இந்நிலையில் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
அதாவது உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகைதந்த மாதகல் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுடன் இணைந்து பேரணியாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
காவல்துறை
இதன் காரணமாக மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் அவ் இடத்தை விட்டு அகன்று சென்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |