தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள்

Mullaitivu Tamil Srilankan Tamil News
By Beulah Jul 05, 2023 09:11 AM GMT
Report

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான போர் குற்றமும் சிறிலங்கா அரசாங்கத்தினால் போர் நெறிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட யுத்தமும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் வடுக்களும் மெல்ல மெல்ல திட்டமிட்ட அரச கட்டமைப்பினால் அழிக்கப்பட்டு வந்தாலும் அவ்வப்போது தோன்றும் மனித புதைகுழிகளும், அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும், தமிழ் சமூகத்தின் எதிர்ப்புக்களும் நாட்டில் இன்னமும் இனரீதியான ,மத ரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வு முன்னோக்கி கொண்டு செல்லப்படவில்லை என்பதை எடுத்துகாட்டுகின்றது.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், போர்க்குற்ற விசாரணைகள், காணாமல் போனோர் தொடர்பான தீர்வு தொடர்பில் சர்வதேச ரீதியாக சிறிலங்கா சமாளிப்புகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பகுதியில் பெண் போராளிகள் உட்பட பலர் கொன்று பைகளில் அடைத்து புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் புதைகுழி ஒன்று இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளமை பல தரப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்ததின் போது தமிழர் தாயக பகுதிகளில் சுமார் நாற்பதாயிரம் தொடக்கம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தின் பல்வேறு விதமான கொடூர தாக்குதலாலும், செல் வீச்சுக்களாலும் கொல்லப்பட்டதாக இறுதி யுத்ததின் போது உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

அதே நேரம் இறுதி யுத்ததிற்கு முன்பும், யுத்த நேரத்திலும், யுத்தம் நிறைவுற்ற பின்னரும் சிறிலங்காவின் முப்படையினராலும், வெள்ளை வான்களின் மூலமாகவும், தமிழர் தாயகப்பகுதிகளில் இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும் இன்னும் பலர் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும் அதே நேரம் யுத்தம் நிறைவுற்ற சமயம் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து பின்னர் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை தேடும் சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சுமார் 15000 பேர் வரையில் சிறிலங்காவின் இராணுவம், கடற்படை,  அரசபுலனாய்வாளர்கள், காவல்துறையினரால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் சிறிலங்காவின் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக 2022 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட தகவலின் பிரகாரம் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் உள்ளடங்கலாக இதுவரை சிறிலங்காவில் 14988 நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமைக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சாலும், ஜனாதிபதி செயலகத்தாலும் பெறப்பட்ட கோவைகளின் பிரகாரம் 14700 பேர் காணமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக பிராந்திய ரீதியில் அமைக்கப்பட்ட அலுவலகங்கள் ஊடாக 1557 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தலைமை அலுவலகத்தால்1375 முறைப்பாடுகளும் இவற்றில் நடவடிக்கையின் போது காணமற்போனோர், ஆணை கிடைக்காதவை, இரட்டை பிரதிகள் தவிர்த்து ஒட்டு மொத்தமாக 14988 பேர் காணாமல் போய் உள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலகம் தகவல் வழங்கியுள்ளது.

வடக்கிலிருந்தே அதிக முறைப்பாடுகள்

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

அதிலும் அவ் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட முறைபாடுகளில் 60.68 வீதமானவை வடக்கில் இருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவ் அலுவலகம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 488 முறைப்பாடுகளும் அவற்றில் 2000-2021 வரையான காலப்பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான 361 முறைப்பாடுகளும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 1010 முறைப்பாடுகளும் அவற்றில் 2000-2021 வரையான காலப்பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான 948 முறைப்பாடுகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 528 முறைப்பாடுகளும் அவற்றில் 2000-2021 வரையான காலப்பகுதிகளில் காணமல் ஆக்கப்பட்டமைக்கான 461 முறைப்பாடுகளும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2106 முறைப்பாடுகளும் அவற்றில் 2000-2021 வரையான காலப்பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான 1485 முறைப்பாடுகளும்

வவுனியா மாவட்டத்தில் 568 முறைப்பாடுகளும் அவற்றில் 2000-2021 வரையான காலப்பகுதிகளில் காணமல் ஆக்கப்பட்டமைக்கான 401 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் காலகட்டத்தின் பிரகாரம்

சிறிலங்காவில் 2001-2010 ஆண்டு காலப்பகுதியில் 5605 நபர்கள் காணாமல் போயுள்ளதுடன்,

1981-1990 வரையான காலப்பகுதியில் 5255 நபர்களும்,

1991-2000 வரையான காலப்பகுதியில் 3440 நபர்களும்

காணாமல் போயுள்ளதற்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவ் அலுவலகம் தகவல் வழங்கியுள்ளது.

சிறிலங்கா அரசின் மீதும் அதே நேரம் காணாமல் போனோர் அலுவலகம் மீதும் நம்பிக்கை அற்ற நிலையில் தமிழர் தாயக பகுதிகளில் பலர் இவ் அலுவலகத்தில் எவ்விதமான பதிவிகளையும் முறைப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் உள்ள நிலையிலேயே 60 வீதமான முறைப்பாடுகள் வடக்கில் இருந்து மாத்திரம் மேற்கொள்ளப்பட்டமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

மனித புதைகுழிகள்

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட, சரணடைந்த தங்கள் பிள்ளைகளை தேடும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் எங்காவது உயிருடன் இருந்து விடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் மரணிப்பதற்கு முன் அவர்களைப் பார்த்து விடமாட்டோமா என்ற ஆசையில் 14 ஆண்டுகள் கடந்து வீதிகளிலும், அரச அலுவலகங்களிலும், மனித உரிமை ஆணைக்குழுக்களிலும், விசாரணைக்குழுக்களுக்கு முன்பாகவும் சாட்சியமளிக்காத நாட்களே இல்லை.

ஆனால் அவ்வாறு நம்பிக்கையுடன் பிள்ளைகளை தேடும் தாய்மார்களின் மனதில் தங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என்ற கவலைகள் அண்மைக்காலமாக சூழ்ந்து கொள்ளத்தொடங்கியுள்ளது.

அதற்கு காரணம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் அவ்வப்போது தோன்றும் மனித புதைகுழிகளே! முன்னதாகவே மன்னார் மாவட்டத்தில் திருகேதீஸ்வரம் மற்றும் மன்னார் சதோச புதைகுழிகளில் கம்பிகள் சுற்றப்பட்டும் அதே நேரம் குழந்தைகள் உட்பட 250 க்கும் அதிகமான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது அது சிறிலங்கா அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளாக இருக்கலாம் என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் மன்னார் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நடத்தி வருகின்றனர்.

அவ்வழக்கே பல ஆண்டுகள் நடத்தப்பட்டு முடிவுறுத்தப்படாத நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நீர் வடிகால் அமைப்பு சபையினால் நீர் விநியோகத்திற்கு என தோண்டப்பட்ட குழி ஒன்றில் நான்கிற்கு மேற்பட்ட பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் 

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

முல்லைத்தீவு நெடுங்கேணி பிரதான வீதியில் 26 மைல் எல்லையில் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவகர் பிரிவில் கடந்த வியாழக்கிழமை(29) நீர்வழங்கல் மேற்கொள்வதற்காக ஒப்பந்த நிறுவனம் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது வீதியில் இருந்து 6 மீற்றர் தொலைவில் ஒரு மீற்றர் அகலம் கொண்ட கிடங்கில் 2-6 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை(30) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜ தலைமையிலான குழு மதியம் மூன்று மணியளவில் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு அங்கு இராணுவ சீருடையை ஒத்த உடைகளும் எழும்புத் துண்டுகளும் பெண்கள் அணியும் உள்ளாடைகளும் வெளியில் காணப்பட்டதாகவும் இதற்கான அகழ்வுப் பணியை மேற்கொள்ள கொக்கிளாய் காவல்துறையினர் வருகின்ற வியாழக்கிழமை(6) உரிய தரப்பு நிறுவனங்களுக்கு அழைப்பை விடுத்து அகழ்வுப் பணியை மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.

குறிப்பாக அப்புதைகுழிகளில் பெண்களின் உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் வட்டுவாகல் பகுதியில் சரணடைந்த சமயம் அணிந்ததற்கு ஒப்பான சீருடையுடன் கூடிய எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரம் குழியின் ஓரத்தில் பொலித்தீன் பைகளால் கட்டப்பட்ட விதாமாக உள்ள சடலங்கள் என சந்தேகிக்க கூடிய விதமாக உள்ள சடலங்களும் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் எலும்புகள் தமிழர் தாயகப்பகுதிகளில் பல்வேறு விதமான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக சரணடைந்த பெண் போராளிகள் சித்திரவதைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொன்று புதைக்கப்பட்டுள்ளார்களா, அல்லது சரணடைந்த புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்களா, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தேடும் தங்களின் உறவினர்களின் சடலங்களா இவை போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் ஒழுங்கான விசாரணைகள் மேற்கொள்வதில்லை

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

கடந்த ஒரு வாரத்திற்கு  முன்பாக சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் ஒழுங்கான முறையில் விசாரணைகளை மேற்கொள்வதில்லை என்பது தொடர்பில் நான்கு அமைப்புக்கள் இணைந்து குற்றசாட்டு ஒன்றை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கை வெளிவந்து ஒரு வாரம் கூட பூர்த்தியாக நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடமான கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த தாங்கள் 1984 ஆண்டு இடம் பெற்ற யுத்தம் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேறியதாகவும் 1984 ஆண்டுக்கு பின்னர் அப்பகுதி முழுவதும் இராணுவத்தின் சூனியப்பிரதேசமாகவே காணப்பட்டதாகவும் அங்கு பாரிய இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தின் மருத்துவ முகாம் காணப்பட்டதாகவும் பொது மக்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழைய முடியாத நிலை காணப்பட்டதாகவும் அப்பகுதியில் வசிக்கும் சுந்தரம்பிள்ளை சிவமணி தெரிவிக்கின்றார்.

2009 யுத்தம் நிறைவுற்ற பின்னரும் இப்பகுதி முழுவதும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டதுடன் யுத்தம் நிறைவடைந்து 2011-2013 வரையான காலப்பகுதியிலேயே அப் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதி வழங்கப்பட்டதாகவும் அப்பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக தனது மகன் வீடு ஒன்று அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டிய சமயத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் உடையுடன் ஒரு சடலம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

அத்துடன் இப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் தனது இரு சகோதரர்கள் தேங்காய் ஆய்வதற்காக நாயாறு பகுதியில் இருந்து தங்கள் காணிக்குள் சென்ற சமயம் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டதாகவும் பின்னர் கிணற்றில் இருந்து தனது இரு சகோதரர்களையும் சடலமாக மீட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அரச படையினரின் வசம் இருந்த பகுதி ஒன்றில் ஆடைகள் உக்காத நிலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த சந்தேகத்தையும் சிறிலங்கா இராணுவத்தின் மீது திருப்பியுள்ளது இருப்பினும் நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே குற்றம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் போலித்தனமானவை என்பதுடன் காலத்தை வீண் விரயம் செய்து குற்றம் செய்தவர்களை சட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வேலையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அதே நேரம் நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் கடந்த வாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பிலும் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறிலங்காவில் பல்வேறு காலப்பகுதிகளில் நடைபெற்ற மோதல்களின் போது பாரிய மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான சடலங்கள்

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதைகுழிகளில் இன்னும் பல்லாயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு உள்ளதாகவும் , இந்தப் புதைகுழி தொடர்பான விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக்குழுக்கள் தமது கடமையை சரிவர முன்னெடுக்கவில்லை எனவும் அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன எனவும் நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும், திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும் நீதிமன்ற உத்தரவை காவல்துறை தாமதப்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் புதைகுழி உள்ள இடங்களுக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது உயிருடன் உள்ள சாட்சிகளை கண்டறிவதற்கு எந்த ஒரு தரவுகளும் சேகரிக்கப்படவில்லை என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் யாரேனும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டிருந்த வழக்குகளிலும் அந்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேசத்திற்கு முன் தாங்கள் விசாரணைகளை திறம்பட செய்வதாக காண்பித்து வழக்கு விசாரணைகளை இழுத்தடிப்பதும் வழக்குகளை இழுத்தடிப்பதாகவுமே பல புதைகுழி வழக்குகள் காணப்படுவதாக புதைகுழி வழக்குகளில் அரசாங்கம் தான் என்ன நினைக்கின்றதோ அதையே செய்கின்றது என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்க மன்னார் மாவட்ட தலைவி மனுவெல் உதயசந்திரா தெரிவிக்கின்றார்.

மேலும் இராணுவம் இவ்வாறு தமிழர்களை கொன்று புதைத்த இடங்களையே இராணுவ முகாம்களாக்கி வைத்துள்ளதாகவும் அவ் காணிகளை விடுவித்தால் இவ்வாறு நூற்றுக்கணக்கான புதைகுழிகள் வெளிப்படலாம் என்ற அச்சத்திலேயே அவ் முகாம்களை இராணுவம் கைவிடாமல் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியில் இதே போன்று உள்ள வேறு புதைகுழிகளும் கண்டுபிடிக்கபட்டு விடக்கூடாது என்பதற்காகவே மகாவலி வலயம், பெளத்த விகாரைகள், சிங்கள குடியேற்றங்களை அமைத்து புதைகுழிகளை மறைக்கின்றது என குற்றம் சுமத்துகின்றார்.

கடந்த 2018 மன்னார் சதோச மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வழக்கில் குற்றம் இழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் சந்தேக நபர்களும் அடையாளப்படுத்தப்படவில்லை.  மேலும் மிகுதி உள்ள எலும்புகளை அகழ்வதற்கான நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஜனநாயகம் புதைக்கப்பட்டமை

தொடரும் மர்மம் விலகாத மனித புதைகுழிகள் | Tamil Genocide Human Burials Mullaitivu

அதே நேரம் மன்னார் திருகேதீஸ்வரம் இராணுவ முகாமிற்கு அருகில் மீட்கப்பட்ட 141இற்கு  அதிகமான எலும்புக்கூடுகளும் அவை கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணையும் 10 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வருகின்ற போதிலும், மீட்கப்பட்ட எலும்புகள் இதுவரை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதே போன்று யாழ்ப்பாணம் மிருசுவில் புதைகுழி, செம்மணி புதைகுழி, மாத்தளை புதை குழி என 20 இற்கும் மேற்பட்ட புதைகுழிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கான ஆதாரங்கள் புதைக்கப்பட்டாலும் அவற்றை உறுதி செய்வதற்கான இழுத்தடிப்புக்கள் மூலம் தன்னை பாதுகாத்து கொள்கின்றது இந்த அரசாங்கம்.

நாட்டில் ஒரு நபர் வாழ்வதற்கான உரிமை சிறிலங்காவில் மறுக்கப்பட்டு சர்வதேச யுத்த சட்டங்கள் மீறப்பட்டு ஜனநாயகம் புதைக்கப்பட்டதன் நேரடி சாட்சியமே இந்த புதைகுழிகள். 

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இன்னும் கண்டுபிடிக்கப்படவுள்ள மனித புதை குழிகள் சிறிலங்காவில் தசாப்தங்கள் கடந்தும் இடம்பெறும் இன அழிப்பு மற்றும் ஜனநாயக கொலைகளின் சாட்சியங்களே.

இந்த புதைகுழிகள் தொடர்பில்  எப்போது நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ  இந்த புதைகுழிகளில் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி  எப்போது கிடைக்கின்றதோ அன்று தான் இந்த நாடு சுகந்திர நாடு என்ற வழி நோக்கி நடக்கும் அதுவரை மதவாத, இனவாத கொலையாளியாகவே இந்த நாடு காணப்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025