அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். ஊடகவியலாளர் - யாழ். ஊடக அமையத் தலைவர் விசனம்
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (02.09.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தென்னிலங்கை ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள்.
அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
போராட்டங்கள் மற்றும் படுகொலை
செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.

நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.
சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |