கிழக்கு பல்கலையில் தமிழ் மொழிக்கு ஏன் இந்த நிலை!
நாட்டில் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் மரபு மாற்றமடைந்து வருவதாக முன்னெப்படும் தற்போதைய அரசாங்கத்தின் பிரசாரங்கள், சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகளால் கேள்விக்குள்ளாகுகிறன.
அந்தவகையில் தற்போதும், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிப்பு, மற்றும் பின்தள்ளப்படல் போன்றவை தொடர்கின்றன.
அத்துடன், இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அவ்வப்போது பதிவாகியிருந்தன.
சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் பெயர் பலகை ஆகியவற்றில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப் பட்டிருந்தன.
தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்தே, தமிழ் மொழி மீண்டும் உள்வாங்கப்பட்டது.
ஒரு நாட்டின் முதல் பிரஜை முதல்கொண்டு அரசியலமைப்பின் மொழி கொள்கையை பின்பற்ற கட்டாயப்பட்டுள்ளனர். இது ஜனநாயக நாடொன்றின் அடிப்படையான விடயம்.
இவ்வாறான நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்சினை பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது பல சமூக மாணவர்கள் கல்வியை தொடரும், மற்றும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பின்தள்ளப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன்,
“மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகவும், பண்பாட்டின் சின்னமாகவும் விளங்குகிறது. தமிழ் மொழி அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் வளமான இலக்கிய மரபுகளால் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
வடகிழக்கில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தித்தான் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பெயர்ப்பலகை வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு இருக்க தமிழ் மொழியினை முதன்மைப்படுத்தாமல் விடுவது எமக்கான அடையாளத்தை புறக்கணிக்கும் செயலாகவே உள்ளது.
யாழில் அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களக் கிளை அலுவலகத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதன்மையிடம் வழங்கப்பட்டமை பெரிதும் பாராட்டப்பட்டது.
அதுபோல் யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய வரவேற்பு பலகையில் கூட தமிழ் மொழிக்கு முதன்மையிடம் வழங்கப்பட்டுள்ள இந்த சூழலில் கிழக்கில் மாத்திரம் தமிழ் மொழி பின்தள்ளப்பட்டுள்ளது.
எனது இந்த பதிவு இனவாதமோ அல்லது மொழிவாதமோ என்பதற்கானதல்ல. எம் இனத்தின் அடையாளம் தமிழ். அது எங்கள் உரிமை என்பதற்காகத்தான்.
உடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெயர்பலகையினை மாற்றி தமிழுக்கு முதன்மையிடம் கொடுத்து நிறுவுமாறு இது தொடர்பான அதிகாரிகளுடன் உரையாடியுள்ளேன்.
விரைவில் இதனை செயற்படுத்த வேண்டும். இது போன்ற தவறுகளை எதிர்காலத்தில் தொடராமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளவும் வேண்டும் என்பதே எமது விருப்பம்” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
