ரணிலின் முடிவு! வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சும் செயல் - தமிழ் தலைமைகள் கூட்டாக கண்டனம்
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள், மற்றும் இன வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள பொது நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பு வரை பயணித்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதும், தமது இழப்புக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய படையினருக்கும் அதே இடத்திலேயே நினைவு கூரலைச் செய்ய வேண்டும் என்பதும் வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சும் செயற்படாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள், மற்றும் இன வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக கொழும்பில் நினைவுத் துாபி அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கூட்டாக கண்டனம்
இந்த நிலையில் பொது துாபி அமைக்கும் செயற்பாட்டிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வன், புளொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர், செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
தென்னிலங்கையில், அமைக்கப்படவுள்ள பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு எனவும் இன அழிப்பை மேற்கொண்டவர்களும், இழப்புக்களை சந்தித்தவர்களும் ஒரே இடத்தில் நினைவு கூருவது முரண்பாடாகும் எனவும் தமிழ்த்தேசியத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென்னிலங்கைத் தலைவர்கள் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்களாயின் இவ்வாறான இனவழிப்பு சம்பவங்க்ள ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறியுள்ளனர்.
நினைவேந்தல் தூபி முள்ளிவாய்க்காலில்
போரினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டியது கட்டாயமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுநினைவுத்தூபியை அமைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக சிறிலங்கா அராசாங்கம் சர்வதேசத்திற்கு காண்பிக்க முனைவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தாயக உறவுகளுக்கான நினைவேந்தல் தூபி முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட வேண்டும் எனவும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்