தேனிசை தென்றல் தேவாவுக்கு ஐபிசி தமிழின் அஞ்சலி!
தேனிசை தென்றல்" என்றும் ‛கானா நாயகன்" என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா தனது 75 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
"இசையால் வசமாகா இதயம் எது?" என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. 1990களிலும் அதன் பின்னரும் வாழ்ந்த ஒவ்வொருவரையும் தனது இசையால் கட்டிப்போட்டவர் தேனிசை தென்றல் தேவா.
90களில் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, தலைமுறைகள் கடந்தும் அவரது இசையின் வலிமையையும் காத்திரத்தையும் அனைவரும் அறிவர்.
நாட்டுப்புற இசை வடிவம்
அவரது இசை பலருக்கு மருந்தாகவும், பலருக்கு ஆறுதலாகவும், துயரத்தில் தோள்கொடுக்கும் நண்பனாகவும், மகிழ்ச்சியான தருணங்களின் அடையாளமாகவும் அமைந்தது.
தமிழ்த் திரையிசையில் கானா என்ற நாட்டுப்புற இசை வடிவத்தை அறிமுகப்படுத்தி, அதை உலகளவில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றவர் அவர்.

இவ்வளவு உயரம் தொட்ட பின்பும் எளிமையான கலைஞராகவே வாழ்ந்தார். அவரது தேனிசையால் ஆட்கொள்ளப்படாத உள்ளங்களே இல்லை என்று சொல்லலாம்.
ஒரு காலகட்டத்தின் இசை நாயகனாக, இளைய தலைமுறை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடிய இசையமைப்பாளராகத் தமிழ்த் திரையிசை வரலாற்றில் தேவா தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.
தேவாவுக்கும் ஐபிசி தமிழுக்குமான உறவு
இசையமைப்பாளராக இருந்தபோது தேவா இறுதியாகப் பாடிய பாடல் ஐபிசி தமிழின் "போராட்டம்" திரைப்படத்துக்காக அவர் பாடிய "சோறுதான் முக்கியம்" என்ற பாடலாகும். இந்த உறவை ஐபிசி தமிழ் என்றும் நன்றியுடன் நினைவுகூரும்.
தேவாவின் மறைவால் துயருற்றிருக்கும் திரைத்துறையினருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் ஐபிசி தமிழ் தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |