தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது நினைவேந்தல்
நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் யாழில் (Jaffna) நடைபெறவுள்ளது.
சிறிலங்கா (Sri Lanka) அடக்குமுறை அரசுகளின் தொடர்ச்சியான 1958 ,1977 , 1983இல் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட இனக்கலவரங்களால் தமிழர்களின் பொருளாதார வளங்களும், அறிவியல், பண்பாட்டு நிலையங்களும் அழித்து நாசமாக்கப்பட்டன.
தமிழர் கலாச்சாரத்தை அழிக்க நிகழ்ந்த பண்பாட்டுப் படுகொலை தான் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும்.
சிறிலங்கா அரசின் அடக்குமுறை
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் மரணம் அடைந்தனர்.
சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த தமிழ் மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் இந்த மரணங்களுக்குக் காரணமாயின.
ஈழத் தமிழர்கள் படுகொலை
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அன்றிலிருந்து தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது.
இநிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக நாளையதினம் (10.01.2025) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |