தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு இராமேஸ்வரத்தில் போராட்டம்
தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்யும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து, இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இன்று தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், கடற்றொழிலாளர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலவிற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய மத்திய அரசிற்கும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற 11 கடற்றொழிலாளர்களையும், அவர்களது மூன்று விசைப்படகுகளையும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதையும் நிறுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள், 15 நாட்களுக்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
