யாழ். கடற்பரப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! கொந்தளித்த மீனவர்கள்! நடந்தது என்ன? (காணொளி)
இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சில மீனவர்கள் தமிழ் கட்சிகளில் தூண்டுதலில் பிரச்சினையை விளைவித்ததாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணம் - வடமராட்சி, சக்கோட்டை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று இந்திய படகுகளால் நேற்றிரவு பதற்றமான சூழல் நிலவியிருந்தது.
இதன்போது, இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்திய மீனவர்களினால் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது சில மீனவர்கள் தமிழ் கட்சிகளில் தூண்டுதலில் பிரச்சினையை விளைவித்தனர்,பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பி வந்துவிட்டேன்.
அதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களின் மோதல் தீவிரமடைந்துள்ளது.மக்கள் ஆத்திரமடைந்து சட்டத்தினை கையிலெடுத்து இந்திய மீனவர்களை பிடிக்க சென்றுள்ளனர். இதன் காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலில் கொலையும் இடம்பெற்றுள்ளது.சடலங்கள் இன்றைய தினம் கரையினை வந்தடையவுள்ளது.
இவ்வாறான நிலையில்,இலங்கை கடற்படை சட்டரீதியாக இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்த நிலையில் பிரச்சினையை கைவிட்டு கரைக்கு வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய வன்முறை சம்பவம் காரணமாக வட பகுதி மக்கள் கடற்றொழிலினை மேற்கொள்ள முடியாது சிரமப்பட்ட நிலையில், வன்முறைகளுக்கு முடிவு கட்டிய பின்னர் கடற்றொழிலுக்கான நிம்மதியான சூழல் நிலவி வருகின்றது.
13ம் சீர்த்திருத்தம் வேண்டாமென தற்போது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழ் கட்சிகள் சில மீனவர்களுக்கு மதுபானத்தினை பெற்றுக்கொடுத்து சில பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.
