பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காண்பிக்கும் அரசியல் தலைமைகள்
தமிழ் கட்சிகள் எதிரவரும் 25ஆம் திகதி கடையடைப்புக்காண அழைப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
இவ்வாறான கடையடைப்புகள் பலவற்றைக் கண்டிருக்கின்றனர். ஒருநாள் கடையடைப்பு மறு நாளுடன் மறந்து போவதே இதுவரையில் நடந்திருக்கும் சங்கதி.
எனினும் ஆட்சியாளர்களின் அத்துமீறலை எதிரக்கும் நோக்கில் இவ்வாறான எதிர்ப்புகளை வெளியிடுவதைத் தவிர, வேறு எதனையும் செய்யக்கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் இல்லை.
ஆனால், ஆட்சியாளர்களின் பௌத்த மயமாக்கலை எதிர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான ஜனநாயக எதிப்பு நடவடிக்கைகள் கட்டுக்கோப்பானவையாகவும் தெளிவான நிலைப்பாடுகளை முன்வைப்பனவாகவும் இருக்க வேண்டும்.
அடையாள எதிர்ப்பு நடவடிக்கை
அவாறில்லாது “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி” என்பது போல் அமையக்கூடாது.
தமிழ் கட்சிகளின் இந்த அடையாள எதிர்ப்பு நடவடிக்கையின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்புமாறு சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துவோர் அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தக் காலத்திலும் எதுவுமே கிடைத்துவிடக் கூடாதென்னும் நோக்கில் செயலாற்றிவரும் தமிழர் விரோத சக்திகள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் தங்களின் நிகழ்ச்சிநிரலை புகுத்த முயற்சிக்கின்றனர்.
இது மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளும் திசைதிருப்பப்படுகின்றன.அண்மைய காலத்தில் இடம்பெற்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தின்போதும் தீய சக்திகள் உள்நுழைய முயற்சித்தன.
தீயசக்திகளின் உள்நோக்கங்கள்
உள்நுழைந்து தங்களின் நிகழ்ச்சிநிரலை புகுத்த முற்பட்டன. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அண்மையில், யாழ், பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த பேரணி வரையில் தீய சக்திகளின் நிழல் இருந்தது.
தீயசக்திகளின் உள்நோக்கங்களை அறியாமல் பலரும் வீழ்ந்துவிடுவதுமுண்டு. பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின்போதும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான கோஷங்களை முன்வைப்பதற்கு தீய சக்திகள் முயன்றிருந்தன.
தென்னிலங்கையின் சிங்கள - பௌத்தவாதிகள் எதிர்த்துவரும் ஒன்றை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறுபவர்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?
இவர்கள் யாருடைய நலன்களுக்காக செயலாற்றுகின்றனர்? வடக்கு - கிழக்கை மையப்படுத்தி இடம்பெறும் விடயங்களை நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும்.
அதாவது. ''இங்கு தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர்கள்"என்பது போல் - கடிதத் தலைப்பு சிவில் சமூகங்கள் பெருகிவிட்டன. ஒவ்வொருவரும் தங்களின் நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காக மக்களை பகடைகளாக உருட்ட முற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியம் பேசும் பிரதான அரசியல் கட்சிகளின் இயலாமையே இதற்கான பிரதான காரணமாகும். தலைமைகள் என்போர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் இவ்வாறான அரசியல் சீர்கேடுகள் இடம்பெறாது.
ஆனால், அரசியல் தலைமைகள் என்போர் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காண்பிக்கும் நிலையிருப்பதால் சிவில் சமூகமென்னும் பெயரில் அறிக்கைகளை வெளியிடுவோர் எதையும் பேசும் துணிவை பெறுகின்றனர்.
ஏனெனில். அவர்களின் விஷமத்தனமான அறிக்கைகளை காட்டமாக எதிர்க்கும் துணிவை அரசியல் தலைவர்கள் வெளியிடுவதில்லை.
13 எதிர்ப்பு கதைகளின் மூலம் தங்களை தேசிய வாதிகளாக காண்பிக்க முற்படும் தீய சக்திகள் எதிர்வரும் 25ஆம் திகதி கடையடைப்பை தங்களின் தீய நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றனர்.
