செம்மணியை புறக்கணித்த அநுர: தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகம்
இனவாத்தை முற்றாக அழித்தொழிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளமால் கடந்து வந்திருப்பது தமிழர்களிடையே பாரிய ஏமாற்றத்தையும் அரசு தரப்பு மீதான ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் (02.09.2025) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதற்கு முன்னரும் அநுரவின் வடக்கு விஜயம் இடம்பெற்றிருந்தாலும் தற்போது செம்மணி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறி இருப்பதனால் அவருடைய யாழ் விஜயம் என்பது முக்கியமாக தமிழர் தரப்பில் கருதப்பட்டது.
இதனுடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் ஜனாதிபதி செம்மணிக்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்த நிலையில் தமிழர் தரப்பு பாரிய எதிரப்பார்ப்புக்கு மத்தியில் இருந்தனர்.
இருப்பினும், செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது எனவும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் மற்றும் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் மட்டும் கருத்து தெரிவித்துவிட்டு அநுர, செம்மணியை பார்வையிடாமல் கடந்து சென்றிருந்தார்.
இந்தநிலையில், இனவாத்தை முற்றாக எதிர்க்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்து இருந்தால் அவர் செம்மணிக்கு கட்டாயம் விஜயம் மேற்கொண்டிருப்பார் என்ற ரீதியில் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது.
காரணம், தென்னிலங்கை தரப்பை பொருத்தமட்டில் செம்மணி விவகாரத்திற்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.
செம்மணியில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று புதைத்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என தமிழர் தரப்பில் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு தென்னிலங்கை தரப்பை பொருத்தமட்டிலும் ஆதரவை தாண்டி வெகுவாக எதிர்ப்புக்களே காணப்படுகின்றன.
இந்தநிலையில், ஒரு வேளை செம்மணிக்கு தான் விஜயம் மேற்கொண்டால் தென்னிலங்கை தரப்பில் தனக்கான ஆதரவு புறக்கணிக்கப்பட்டு சலசலப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அநுர செம்மணி விஜயத்தை புறக்கணித்து இருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்திப்படைத்த தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்த வேண்டிய சூழலுக்கு அநுர தள்ளப்பட்டிருப்பதுடன் தமிழர்களையும் கவனமாக திருப்திபடுத்த வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், நாலு வார்த்தை செம்மணிக்காக குரல் கொடுத்த அநுர, செம்மணி விஜயத்தை புறக்கணித்து தென்னிலங்கை தரப்பை சிறிது திருப்திபடுத்தியுள்ளார் என கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
இதிலிருந்து காலம் காலமாக தொடர்ந்த இனவாதம் இன்றுவரை வேரூன்றி இருப்பது வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளதுடன் இனவாதம் குறித்த கருத்தெல்லாம் வாக்கு வேட்டை முடிந்தவுடன் கிடப்பில் போடப்படும் என்பதற்கும் இச்சம்பவம் நல்ல சான்று என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச அளவில் நம் நாட்டு தமிழ் மக்களுக்காக பலத்த குரல் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டின் ஜனாதிபதி நாலு வார்த்தையில் கதைத்து விட்டு இவ்வளவு பெரிய விடயத்தை இலகுவாக கடந்திருப்பது கடும் கவலையை உண்டாக்கியுள்ளதாகவும் தமிழர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக காத்திருக்கும் தாய்மாருக்கு ஒரு பதில் பெற்று தருவோம் என மனதை உருக்கு படி தேர்தல் பிராசரத்தில் அன்று கதைத்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கத்தான் இன்று அதே தாய்மாரின் குழந்தைகள், அண்ணன், தம்பி மற்றும் கணவர் என கொன்று புதைக்கப்பட்ட இடத்தை புறக்கணித்து கடந்து வந்துள்ளார்.
இங்கு இனவாதம் புறக்கணிக்கப்பட்டதா என்பதை தாண்டி மாறாக கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மக்களின் கண்ணீரும் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுமே புறக்கணிப்பட்டுள்ள என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

