கரிநாள் பேரணி - ரணிலின் விசனத்திற்கு தமிழர் தரப்பு எதிர்வினை
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “தமிழர் தேசமே எழுந்துவா” என்ற கருப்பொருளில் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி நடத்தபட்டவுள்ள கரிநாள் பேரணிக்கு சிறிலங்கா அதிபர் தனது விசனத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்து, தாய்நாட்டை நேசிக்கும் எவரும் சுதந்திர தினத்தை கரிநாள் என அடையாளப்படுத்தமாட்டார்கள் என அவர் தெரிவித்தாலும், சிறிலங்காவில் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் தமிழ் இனத்துக்கு இவ்வாறான அறவழி எதிர்ப்பை வெளியிடும் தார்மீகம் இருப்பதாக தமிழ்குடிசார் சமூகம் தெரிவித்துள்ளது.
கரிநாள் பேரணி
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் வடக்கு – கிழக்குக்கு கரிநாள் எனப் பிரகடனப்படுத்தியுள்ள பல்வேறு அமைப்புகள் யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.
இந்தப் பேரணி தொடர்பாக கருத்துரைத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, அரசியல் நோக்கங்களுக்காக சிலர் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்று கூறுவது துரதிஷ்டவசமானதெனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறிலங்கா அதிபரின் இந்த விசனமே தமிழர் தாயகம் சரியானதை செய்கின்றது என்பதை ஆதாரப்படுத்தியுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
