வெடுக்குநாறியில் அரங்கேறிய அராஜகம்: கண்டனம் வெளியிட்டுள்ள தமிழீழ அரசாங்கம்
இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாறி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம் இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாறி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் வன்முறையை இம்மாதம் எட்டாம் திகதி கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஆலயம் அமைந்துள்ள வடகிழக்கானது வரலாற்று ரீதியாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களான தமிழர்களின் தாயக பிரதேசம் ஆகும்.
வெடுக்குநாறி ஆலய விவகாரம்
சிறிலங்கா காவல்துறையானது எட்டுப் பேரைக் கைது செய்துள்ளது தலைமுறைகளாக தமிழ்ப் பக்தர்களின் வழிபாட்டிடமாக வெடுக்குநாறி இந்து ஆலயம் இருந்து வருகின்றது.
சிறிலங்கா தேசத்தின் நடவடிக்கையானது அடிப்படை உரிமையொன்றான இந்துக்களின் வழிபாடு செய்யும் உரிமையை மிக மோசமாக மீறுகிறது. “பக்தர்களின் கைதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பெளத்த மதத்தை பலப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிதியும் இந்து மதத்தையும் , ஏனைய மதங்களையும் நலிவற்றத்தாக்குவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என உறுதிமொழி வழங்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் அடையாளங்களை பாதுகாத்தல் என்ற போர்வையின் கீழ் தமிழ் அடையாளங்களை அழித்தலில் யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா அரசானது களமிறங்கியுள்ளது.
தொல்லியல் சட்டமானது எந்தவொரு வரலாறு, சமூக மற்றும விஞ்ஞான ஆராய்ச்சி இல்லாமல் எந்தவொரு இடத்தையும் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்த தொல்லியலுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
சிங்கள பெளத்த பேரினவாதம்
வரலாற்று ரீதியிலான தமிழர் தாயகமான சிறிலங்காவின் வடகிழக்கு பகுதியில் ஏறத்தாழ 1,500 இடங்களை பெளத்த இடங்களாக அடையாளப்படுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
தமிழர் தாயகத்தில் 1970களில் இவ்வாறான ஏறத்தாழ 2,000 நிலையங்களை அடையாளங்காண சிங்கள பேரினவாதி அமைச்சர் சிரில் மத்தியூ திட்டமிட்டிருந்ததை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
தமிழர் பகுதிகளில் குடியேற்றத்தை மேற்கொள்ள, தமிழ் மரபை, தமிழ் அடையாளத்தை அழித்து கலாசார இனவழிப்பை மேற்கொள்ள பெளத்த இடங்களை ஆய்தமாக்க சிங்கள பெளத்த பேரினவாதம் பாவிக்கிறது.
தமிழ் கலாசார இனவழிப்பு
பெளத்த இடத்தை அடையாளப்படுத்தல், காப்பாளரொருவராக சிங்களப் பிக்கு ஒருவரை நியமித்தல், இடத்தைப் பாதுகாப்பதற்கு சிங்கள இராணுவத்தை தரையிறக்கல் தொடர்ந்து சிங்கள விவசாயிகள் குடியேறுதல் என்பன சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி நிரல் ஆகும்.
இந்த நிகழ்ச்சி நிரலே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பெளத்தத்தை முன்னெடுப்பதற்கு சிறிலங்காவுக்கு 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடந்தாண்டு நவம்பரில் இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தது.
1987 இந்திய – சிறிலங்கா ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் “ பெளத்த தடங்களை அடையாளங்காண” அல்லது மீளமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் நன்கொடையானது பயன்படுத்தப்படமாட்டாதென உறுதிப்படுத்தும்படி இந்திய அரசாங்கத்தை நாங்கள் வேண்டுகிறோம்.
சிறிலங்காவின் வடகிழக்கு பகுதி சிங்கள மயமாக்கலைத் தடுப்பது அறஞ்சார் கட்டாயம் மட்டுமின்றி, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குக் கட்டாயமும் ஆகும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |