செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் - தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் நடைபெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு - உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று (23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும் சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழிகளின் அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
அரியாலை சித்துப்பாத்தி புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என ‘மக்கள் செயல்’ என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ‘அணையா விளக்கு’ மூன்று நாள் கவனவீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி (அரியாலை) மனித புதைகுழியை பார்வையிடவும் மக்களை சந்திக்கவும் தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
தடையும் விதிக்கப்போவதில்லை
கடந்தகால மனித உரிமைகள் மீறலைக் கையாள்வது குறித்த நாட்டின் நல்லிணக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால் மனித உரிமைகள் ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கும் எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்று திங் கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரும் அவர் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். இதன் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் திரு கோணமலைக்கும் வருகை செய்ய உள்ளார்.
