இனவாதிகளாக கருதப்படும் தமிழர்கள் : கஜேந்திரகுமாரின் பகிரங்க குற்றச்சாட்டு
மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுடன் இணைந்து பேரணியை முன்னெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், மட்டக்களப்பு காவல் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.எஸ்.பி அமல் எதிரிமான்ன இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
பண்ணையாளர்களின் இந்த தொடர் போராட்டம் வெற்றியளிக்க கூடாது எனும் நிலைப்பாட்டில் குறித்த காவல் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி இருப்பதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சந்திவெளி காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்ததாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர் போராட்டம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் தற்போது 30 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், அவர்கள் கவனயீர்ப்பு பேரணியொன்றையும் சந்திவெளி காவல்துறையினரின் ஆதரவுடன் முன்னெடுத்திருந்தனர்.
இந்த பேரணியை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு சில மணி நேரங்களில், அவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றிருந்ததோடு, குறித்த நடவடிக்கையால் எந்தவொரு வாகன போக்குவரத்து தடையையும் ஏற்படவில்லை.
கைது நடவடிக்கை
இதனை தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டிருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் இடைநிறுத்தியிருந்தனர்.
அத்துடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்ததாக குற்றம் சாட்டி, 6 மாணவர்களை கைது செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்ட பேரணி
ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுப்பதற்கு முன்பதாக காவல்துறையினரை அறியப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மாத்திரம் இந்த சட்டம் இருக்கும் நிலையில், முன் அறிவித்தலின்றி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதை சட்டவிரோதமான செயலாக கருத முடியாது.
எனினும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில், இதனை சட்டவிரோதமானது என கருத முடியாது.
மாணவர்கள் மீதான குற்றச்சாட்டு
இதனை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்து மாணவர்களை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உரிமை உள்ளது.
காவல்துறையினரின் இந்த கைது நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை அடக்கும் செயல்.
அம்பிட்டிய சுமனரத்தன தேரர்
தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என கருத்து வெளியிட்ட அம்பிட்டிய சுமனரத்தன தேரர் இதே மட்டக்களப்பில் தான் இருக்கிறார்.
எனினும், அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை நல்லிணத்தை அடையும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
இனவாதிகளாக கருதப்படும் தமிழர்கள்
மேலும், இவ்வாறான பிரச்சனைகள் குறித்து நாம் பேசினால் இனவாதிகளாக குறிப்பிடப்படுகிறோம்.
தமிழர்களின் பிரச்சனையை தவிர்த்து வேறு எதனையும் நாம் பேசுவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறோம்.
எமது நாளாந்த வாழ்க்கை இத்தனை பிரச்சனைகளுடன் உள்ள போது, எவ்வாறு எம்மால் வேறு பிரச்சனைகள் குறித்து பேச முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.