மாவீரர் வாரத்தின் மாவீரர் எழுச்சி நாள் இன்றில் இருந்து ஆரம்பம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்னும் இரு தினங்களில்(27.11.2026) தமிழர் தாயகம் முழுதும் இடம்பெறவுள்ளது.
தமிழீழ வரலாற்றில் தாய் நிலத்துக்கான போராட்டத்தின் விதைகளாக்கப்பட்ட மாவீரர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மாவீரர்களுக்கான மாதமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் நினைவுக்கூறப்பட்டு வருகிறது.
1995 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வரலாற்று மரபிற்கமைய, நவம்பர் 25 ஆம் திகதியான இன்று முதல் மூன்று நாள் எழுச்சி நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படும்.
மாவீரர் எழுச்சி நாட்கள்
வரலாற்று ஆவணங்கள் மற்றும் மாவீரர் நாள் கையேட்டின்படி, 1990 முதல் 1994 ஆம் ஆண்டு வரை நவம்பர் 21 முதல் 27 வரை ஒரு வார காலமாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1995 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களும் 'மாவீரர் எழுச்சி நாட்களாக' அனுஷ்டிக்கப்படும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மரபிற்கமைய, நவம்பர் 25 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு எழுச்சி நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுவது வழமையாகும்.
அத்துடன், காலை 9.00 மணிக்குப் பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களில் கொடியேற்றப்பட்டு, வீரவணக்கக் கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அஞ்சலி செலுத்தும் மரபு
இவ்வாறு துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும் கொடி, எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு இடம்பெறும் பிரதான மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே இறக்கப்படும்.

இன்றைய தினம் முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரையான மூன்று நாட்களும் வீடுகளிலும் பொது இடங்களிலும் மாவீரர்களின் நினைவாக அகல் விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்தும் மரபு தொடர்ந்தும் பின்பற்றப்படுகிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இந்த எழுச்சி நாட்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |