கேள்விக்குரிய நிலையில் உள்ள தமிழ் தேசிய அரசியல்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சாடல்
தமிழ் தேசிய அரசியல் இன்று ஒரு கேள்விக்குரிய நிலையில் இருக்கின்றது, தமிழர்களின் வாக்கு சிதைவடையும் நிலை காணப்பட்டால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(03.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்கள்
மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஒரு பேராபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களிடையே பொதுவாக பேசப்படும் கருத்து நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான்.
முக்கியமாக சென்ற ஜனாதிபதி தேர்தலில் தென்பகுதியில் மக்கள் எடுத்த முடிவை சற்று பார்க்க வேண்டும். தமிழர்கள் எப்படி வாக்களித்தார்களோ சிங்களவர்கள் ஒரு தெளிவான நிலை எடுத்திருந்தார்கள்.
பல கட்சிகள் ஒன்றிணைந்து கேட்ட வேட்பாளர்களை விட தனித்துவமாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு அதிக வாக்குகளை சிங்கள மக்கள் கொடுத்திருந்தார்கள்.
தமிழ் தேசிய அரசியல்
இன்று எம் முன் உள்ள கேள்வி நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் அதே வேளையிலே போட்டியிடுபவர்கள் யார்? எங்களது அரசியலில் இன்று வெளிப்படை தன்மை காணப்படவில்லை.
ஒருபுறம் நாங்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் எங்களுடன் வாருங்கள் என்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூறுகின்றனர். இன்று ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் அநுரகுமார திசாநாயக்கவின் கட்சி தமிழீழத்துக்குள்ளே அரசியலை முன்னெடுத்து செல்கின்றது.
பல நபர்களும் நாங்கள் இன்று அரசோடு இணைவோம் இணைந்து செயல்படுவோம் என்றெல்லாம் கூறுகின்றார்கள். நாங்கள் தொடர்ச்சியாக தேசியம் உரிமை என்று பேசிவிட்டு எமது மக்களின் தேவைகளையும் புறக்கணிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |