இனப்படுகொலையாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஓரிடத்தில் நினைவகமா...!
இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவுத் தூபியில் தமிழர்களையும் நினைவு கூருவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று யாழில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தமிழர்களின் உணர்வு பாதிக்கும் நிலை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இனவாதியான சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
அவர் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
அனைத்து இனத்தவர்களும் நினைவு கூருவதற்கான பொதுவான நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு” - என்றார்.
