குவைத்திலிருந்து படகில் தப்பிவந்த தமிழர்கள் சிறையில் அடைப்பு
குவைத்தில் இருந்து படகில் மும்பைக்கு தப்பி வந்த 3 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், 3 தமிழர்களின் விளக்கமறியலை மேலும் நீடித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த வினோத் அந்தோணி (வயது29), சயா அந்தோணி அனீஷ் (29), ராமநாதபுரத்தை சேர்ந்த நிடிசோ டிடோ 2 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக குவைத் சென்றனர்.
குவைத்தில் இருந்து தப்பியோட்டம்
3 பேருக்கும் அவர்களின் உரிமையாளர் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை. பாஸ்போர்ட்டையும் அவர் பறித்து வைத்து இருந்தார். 3 தமிழர்களும் தங்கள் நிலைதொடர்பாக அந்நாட்டு காவல்துறை மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு அளித்தும் பலன் கிடைக்கவில்லை.
இதனால் 3 பேரும் கடந்த மாதம் 28-ம் திகதி உரிமையாளரின் படகில் குவைத்தில் இருந்து தப்பித்தனர். அவர்கள் சவுதி அரேபியா, கத்தார், துபாய், ஒமன், பாகிஸ்தான் கடல் வழியாக இந்தியாவின் மும்பை வந்தடைந்தனர்.
காவல்துறையினர் கைது
பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வந்த அவர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். 3 பேரும் காவல்துறை காவலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
காவல்துறை காவல் முடிந்ததால் தமிழர்கள் 3 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |