தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்க அரசு தயார் நிலையில் இல்லை : சிறீதரன் காட்டம்
அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பதை இன்னும் முன்வைப்பதற்கான தயார் நிலையில் அரசு இல்லை என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23.07.2025) இடம்பெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்றைய நாள் இலங்கை வரலாற்றிலேயே முக்கியமான நாள்.
இந்த நாட்டில் ஜூலை இனப் படுகொலை நடந்து 42 வருடங்களாகிவிட்டன. ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையில் லலித், காமினி திசாநாயக்க போன்றவர்களின் வழிகாட்டலில் தமிழர்கள் மீது மிக மோசமான இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது.
வெலிக்கடைச் சிறையிலிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்படப் பலர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். ‘‘பிறக்கப்போகின்ற தமிழீழத்தைப் பார்க்கவா போகின்றீர்கள்?’’ எனக் கேட்டு அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.
ஜூலை 23 இன்றைய நாள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்புநாள். 42 வருடங்கள் கடந்தும் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நீதி இல்லாமல் விசாரணைகள் இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நான் பதிவு செய்கின்றேன்.
இந்த நாட்டில் எந்த அரசு வந்தாலும் இதற்கு ஒரு மன்னிப்புக்கோரலையோ நீதியான விசாரணைகளையோ பரிகாரத்தையோ தேட முற்படவில்லை.
1984 03 11 ஆம் திகதி இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘சண்டே’ என்ற ஆங்கில சஞ்சிகை ஆசிரியர் அனிதா பிரதாப்பிடம், தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வயது நிரம்பிய தலைவரான பிரபாகரன், ‘‘ஜே .ஆர். ஓர் உண்மையான பெளத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்க நேர்ந்திருக்காது” என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
