சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு
சுமந்திரன் (M. A. Sumanthiran) கூறிவிட்டார் என்பதற்காக சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க இருந்த தமிழ் மக்கள் கூட அதற்கு எதிராக பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா - G. Karunakaran) தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று (17.09.2024) மட்டக்களப்பு (Batticaloa) களுவாஞ்சிக்குடி நகரில் முன்னெடுக்கப்பட்ட துண்டுப்பிரசுர பிரசாரத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலிலே ஆறு ஜனாதிபதிகள் மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் நாங்கள் ஆதரித்த ஜனாதிபதிகளோ அல்லது நாங்கள் ஆதரிக்காத ஜனாதிபதிகளோ தமிழ் மக்களின் புரையோடிப் போய் இருக்கின்ற நிரந்தர பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வும் காண்பதற்கு முயற்சிக்கவில்லை.
பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்
இந்த வேளையிலே தான் நாங்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலே எங்களது ஒற்றுமையை, நாங்கள் தொடர்ச்சியாக ஒன்றாக இருக்கின்றோம், எங்களது இனப்பிரச்சினைக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஒரே அரசியல் குரலாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலிலே ஜனாதிபதியாக வர முடியாது என தெரிந்துகொண்டும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி உள்ளோம்.
ஆனால் சிலர் தமிழ் தேசியத்தின் பால் கடந்த காலத்தில் செயற்பட்டவர்கள் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களின் அடிவருடிகளாக இந்தப் பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருப்பது தாங்கள் பெற்ற வாக்குகளுக்கு அந்த வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகவே இன்று களுவாஞ்சிகுடி சந்தையிலே மக்கள் கூறிக்கொள்வதை நாங்கள் கேட்கக் கூடியதாக இருந்தது.
நாங்கள் பிரசாரத்தில் ஈடுபடும் போது மக்கள் எம்மிடத்தில் கூறிக்கொள்வது நாங்கள் எல்லோரும் தமிழர்கள், நாங்கள் எல்லோரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் எங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு தலையடியாக மாறும் என்பதில் எதுவித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ் பொது வேட்பாளருக்காக ஒன்றிணைந்திருக்கும் நாங்கள் எதிர்காலத்திலும்கூட தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக கூட ஒன்றாகச் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இந்நிலையில் எங்களுக்காக போராடுகின்றவர்கள் யார், சுய தேவைகளுக்காக செயல்படுகின்றவர்கள் யார், என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். பொது வேட்பாளர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த மாவட்டத்திலே ஏனைய மாவட்டங்களை விட கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் அதற்காக வேண்டி அவருடைய சின்னமான சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி
எமது பிரசாரத்தில் விருப்பு வாக்கு என்பதற்கு இடமில்லை ஒரே ஒரு புள்ளடியாக தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு மாத்திரமே வாக்களிக்களித்து தங்களது விருப்பத்தெரிவை வழங்க வேண்டும்.
பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கிழக்கு மாகாண காவல்துறை அத்தியட்சகர் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். அதிலே வடகிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய வெறுப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்களினால் அச்சுறுத்தல் இருப்பதாக அதில் கூறப்படவில்லை. அவர்கள் பொதுவேட்பாளரில் வெறுப்பாக இருக்கின்றார்கள் என குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே அச்சுறுத்தல் இருக்கும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அச்சுறுத்தல் இருக்கும்.
ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இரண்டு முனை போட்டியில்லாமல் மும்முனைப் போட்டியாக மாறி உள்ளது. இதனால் சிங்கள மக்களின் வாக்குகள் சமமாக பிரியக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களின் வெற்றிக்கு தேவையாக இருக்கும் பட்சத்திலே அந்த தமிழ் வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்கு செல்லாமல் தடுப்பதற்காக அந்த ஜனாதிபதி வெல்வதற்காக வேலை செய்பவர்கள் பொது வேட்பாளரிலே கவனமாக அச்சுறுத்தல் விடுக்க கூடிய சூழ்நிலை இருக்கின்றது.
யாரும் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதனால் இந்த தமிழ் பொது கட்டமைப்பின் பொது வேட்பாளருடைய வாக்குப்பலம் அதிகரித்து இருப்பதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
குறிப்பாக வடமாகணத்திலே பொது வேட்பாளருக்கான ஆதரவு
பெருமளவு இருக்கின்றது.
சுமந்திரன் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மானிப்பாயிலே நடைபெற்ற
பொதுக் கூட்டத்திலே பேசியுள்ளார்.
சுமந்திரன் கூறிவிட்டார் என்பதற்காக சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க இருந்த தமிழ் மக்கள் கூட அதற்கு எதிராக இந்த பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |