வரி செலுத்தாமல் ஏமாற்றுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
காப்புறுதி ஆவணங்களைச் சேமிப்புக் கருவிகளாகப் பயன்படுத்தி, தடுத்து வைக்கப்படும் வரியைச் செலுத்தாது தவிர்ப்பதைத் தடுக்கும் வகையில் புதிய ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தனிநபர்கள் பலர் தங்களது வருமானத்தை அல்லது பணத்தை வழக்கமான வங்கிச் சேமிப்புகளில் வைப்பிலிடுவதற்குப் பதிலாக, காப்புறுதி ஆவணங்களில் சேமிப்பு வடிவில் வைப்புச் செய்வதன் மூலம் வரியிலிருந்து தப்பித்து வருவதாக நிதி அமைச்சுக்குத் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவ்வாறான முறைகேடுகள் குறித்துப் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டத் திருத்தங்கள்
காப்புறுதித் திட்டங்களை ஒரு சேமிப்புக் கருவியாகக் காட்டி வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுவதைத் தடுக்கும் நோக்கில், வரி வசூலிப்பு விதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளில் சில திருத்தங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் வருமான வழிகளில் ஏற்படும் இவ்வாறான வரி கசிவுகளைத் தடுப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாகும் என தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் வரித் தளத்தை விரிவுபடுத்துவதற்கும், தேசிய வரி வசூலிப்பு முறையை வலுப்படுத்துவதற்கும் இந்த புதிய சட்டத் திருத்தங்கள் அவசியமானவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |