நாட்டில் கவனம் செலுத்தாத14 துறைகளுக்கு வரி அறவீடு! ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்
நாட்டில் இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய( Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வரியை செலுத்தாமல் இருக்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
வரி அறவீடு
வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்ட காலம் இதுபோன்று இதுவரை இருந்ததில்லை. கடந்த ஆண்டு, 14 துறைகள் வரி செலுத்துவதற்காக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என நாம் கொண்டு வந்தோம்.
பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் இந்த 14 இல் உள்ளன.
எனவே, 14-ன் மூலம் பதிவு செய்யப்பட்ட அனைவரின் வருமானம் குறித்தும் உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது.” என்றார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் தீர்வுகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |