மன்னாரில் கணித பாட ஆசிரியரின் கண்மூடித்தனமாக தாக்குதல் :மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் வங்காலை புனித ஆனாள் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அப் பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மாணவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவன் தாக்கப்பட்டமை குறித்து மாணவனின் பெற்றோர் வங்காலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்
ஆசிரியரின் கண்மூடித்தனமாக தாக்குதல்
மன்னார் வங்காலை கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் கடந்த புதன்கிழமை (21) மதியம் பாடசாலையில் உள்ள வகுப்பறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு மாணவ தலைவர்கள் மாணவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கன்னத்தில் தாக்கி அந்த மாணவனை இழுத்துச் சென்று கணித பாட ஆசிரியரிடம் கொடுத்து எதிர்த்து கதைப்பதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கணித பாட ஆசிரியர் குறித்த மாணவனிடம் எவ்வித கேள்வியும் இன்றி இரண்டு கன்னத்திலும் தனது கையால் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதன் போது மாணவன் விழுந்த போது எழுந்து நிற்க வைத்து இரு கையையும் பின் புறமாக வைத்து மீண்டும் இரண்டு கன்னத்தில் தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் மாணவன் இயலாத நிலையில் வகுப்பறைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் மைதானத்திற்கு வருமாறு அறிவித்த நிலையில் மாணவன் இயலாத நிலையில் வகுப்பறைக்குச் சென்ற நிலையில்,தாமதித்து வந்ததாக மைதானத்தில் நின்ற ஆசிரியர் ஒருவரும் அதே கன்னத்தில் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
கேட்கும் திறன் இழந்த மாணவன்
இதனையடுத்து மாணவன் வீடு சென்ற நிலையில் திடீர் சுகயீனமடைந்து அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடுமையான தாக்குதலின் காரணமாக மாணவனின் ஒரு காதின் கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை மாணவனை தாக்கிய கணித பாட ஆசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும்,ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் பாடசாலை நிர்வாகம் செயல்படுவதாக சிறுவனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மாணவனை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |