நீதவானுக்கு லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சிய ஆசிரியர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
வழக்கு ஒன்றை நடத்திக்கொண்டிருந்த நீதவான் மீது லேசர் ஒளிக்கற்றையை பாய்ச்சியதாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.
பலமு லேன், கோட்டே கொடுபம்மா வீதியில் வசிக்கும் போபிட்டிய விதான கிராமத்தைச் சேர்ந்த சதுஷ்க ஜனித் டயஸ் என்ற ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
கடுவெல நீதவான் நீதிமன்ற பதிவாளர் திருமதி திலுபா பிரியதர்ஷனி கடுவெல காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தை சோதனையிட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபரின் பெற்றோர் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசோக விராசூரிய நீதிமன்றில் தெரிவித்தார்.
எனவே, சந்தேக நபரை மனநல மருத்துவரிடம் காட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீதவான் உத்தரவு
கடுவெல காவல்துறை சார்பில் முன்னிலையான அதிகாரிகள் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபரை தேசிய மனநல நிறுவனத்தில் முன்னிலைப்படுத்தி, தடயவியல் மனநல மருத்துவரால் பரிசோதித்து, மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.