ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு -அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது
ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து கல்வி அமைச்சரினால் ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர், அதிபர் சம்பளக் கொடுப்பனவு, அரச ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வரவு - செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக, ஆசிரியர், அதிபர்களின் இப்பிரச்சினையை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இவ்வாறான குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளைப் போன்றே இலங்கையும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்த அமைச்சர் பெரும்பாலான நாடுகள் ஊழியர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.