சம்பளம் அதிகரிக்க முடியாது- அமைச்சரவையின் ஏக மனதான முடிவு!
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை நிறைவேற்ற 56 பில்லியன் ரூபாய் தேவை ஆகவே நாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முடிவை அமைச்சரவை ஏகமனதாக முடிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபாய் நிதியை செலவழிக்க இயலாது என்றும் அவர் தெரவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் பிரச்சினை குறித்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்களுக்கு ஜனநாயக உரிமை காணப்படும் நிலையில் அதனை அரசாங்கம் தடுக்காது என்றும் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.