யாழில் ஆலய நகைகள் மாயம்: நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்துறை (Kayts) பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின் நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (12) காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.
இதன்போது, ஆலயத்தின் முகவாயிலில், பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா என கோஷங்களை எழுப்பியவாறு ஆண் பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்துள்ளனர்.
பணப்பெட்டித் திறப்பு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் பணப்பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் சிலருக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் உடனடியாக காவல்துறையினருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை. சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள் பணங்கள் என்பன காணாமல் போன தான தகவல்கள் சமூகத்தில் பரவ ஆரம்பித்தது.
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து குறித்த விடயம் தொடர்பில் தலைவரிடம் வினவிய மக்கள் பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் பணங்கள் காணாமல் போனது என கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என பதிலளித்தார்.
ஆலய நிர்வாகம்
எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகள் பணங்களை ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஆதலால் குறித்த களவானது ஆலய நிர்வாகத்திற்கு தெரிந்து இடம் பெற்றிருக்க கூடும் என்பது எமது சந்தேகமாக இருக்கம் நிலையில் காவல்துறையினர் கால இழுத்தடிப்பைச் செய்யாமல் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டு்ள்ளனர்.
பிரதேச செயலாளர்
இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் தொலைபேசி ஊடாக தொடர்புக்கொள்ளப்பட்டது.
அப்போது, குறித்த ஆலயத்தில் நகை பணம் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |