தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை - நாளை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நாளையும் நாளை மறுதினமும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை துறையின் தலைமை இயக்குனர் உட்பட 26 பேர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகம், திட்டங்கள் மற்றும் இதர பகுதிகள் இந்த சுற்று விவாதத்தில் கவனம் செலுத்தும் முகமாக குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
2021 ஆம் ஆண்டில், இலங்கை தாய்லாந்திற்கு 59 மில்லியன் டொலர்களை ஏற்றுமதி செய்தது.மற்றும் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு 355 மில்லியன் டொலர்களை இறக்குமதி செய்தது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.