தாய்லாந்தில் சூடு பிடித்துள்ள பொதுத்தேர்தல்!
தாய்லாந்தில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் மற்றும் அரசியலமைப்பு மீதான பொதுவாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றன.
குறித்த வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று (08-02-2026) விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பிரதமர் அனூடின் சார்ன்விராகுல் தலைமையிலான “பும்ஜைதாய்”, சீர்திருத்தங்களை முன்னிறுத்தும் “மக்கட் கட்சி” மற்றும் “பியூ தாய்” ஆகிய முக்கிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பொதுத்தேர்தல்
சுமார் 5.3 கோடி வாக்காளர்கள், 500 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தகுதி பெற்றுள்ள நிலையில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

மேலும் தெரியவருகையில், இம்முறை பொதுத்தேர்தலோடு இணைந்து 2017ஆம் ஆண்டு அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டுமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பும் (Referendum) நடத்தப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் ஆகியவை இத்தேர்தலில் மக்களின் முக்கிய தீர்மானிக்கும் சக்திகளாகப் பார்க்கப்படுகின்றன.
தேர்தல் முடிவு
தற்போதைய பிரதமர் அனூடின் சார்ன்விராகுல் செப்டம்பர் 2025இல் பதவியேற்றதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

எக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி அரசாங்கமே அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தின் செல்வாக்கு மற்றும் ஜனநாயக மாற்றங்களுக்கு இடையிலான இந்தப் போராட்டமானது தாய்லாந்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |