தைப்பூசம் 2024 : கேட்டதை கொடுக்கும் முருகனை எப்படி வழிபடலாம்...!
இந்துக்களால் கொண்டாடப்படும் தைப்பூசம் நாளை 25ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
தைப்பூசம் தினத்தில் தான் உலகம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளதோடு முருகனுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகின்றது.
இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். மேலும், இவ்வருட தைப்பூசம் குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமையில் வருவதால் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
முருகப் பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேலை பெற்ற தினம்தான் தைப்பூசம் என்ற கருத்தும் உண்டு.
தைப்பூசம் வழிபாடு செய்ய உகந்த நேரம்
நாளை 25ம் திகதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் திகதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் திகதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இது மட்டுமின்றி வரும் 24ம் திகதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் திகதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது.
தைப்பூச விரதம் இருப்பவர்கள், நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்தால் நன்மைகள் கிட்டும்.
தைப்பூச விரதம் எப்படி இருக்க வேண்டும்
காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவதுடன் முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.
முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை 48 நாட்கள் விரதம் மேற்கொள்வர். காலை முதல் மாலை முருகனை நினைத்து உபவாசம் இருந்து முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
மேலும் தைப்பூச நாளன்று வீட்டில் முருகன் படத்திற்கு மலர் மாலை சாற்றி பூஜை செய்ய வேண்டும்.
தைப்பூசம் வழிபாட்டின் பலன்கள்
பாயாசம், சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்யமாக படைத்து முருகனை வழிபடலாம். எதுவும் முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வைத்து மனதார முருகனை வழிபட்டாலே போதும்.
அன்றைய தினம் விரதமிருந்து உங்கள் வேண்டுதலை மனமுருகி முருகனிடம் வைத்தால் நீங்கள் நினைத்தது நடக்கும். மேலும் வீட்டில் வேல் இருந்தால் வேலுக்கு அபிஷேகம் செய்து வேல் விருத்தம், கந்தர் அலங்காரம் போன்ற பதிங்களை பாராயணம் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது மிகுந்த விசேஷசமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |