தையிட்டி போராட்ட விவகாரம் : வேலன் சுவாமிகள் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்க சொந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக வேலன் சுவாமிகள், வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 30 பேர் வரையிலானோருக்கு எதிராக காவல்துறையினரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (5) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் அவர்களுக்கு மேலதிகமாக அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களும் இன்று (05) நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
முன்னிலையான சட்டத்தரணிகள்
அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், எஸ் ஶ்ரீகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது.

அமைதி வழி போராட்டங்களுக்கு இலங்கை அரசியலமைப்பிலும், தீர்க்கப்பட்ட வழக்குகளின் ஊடாகவும் உரித்துகள் வழங்கப்பட்டுள்ளமையை இன்றைய விசாரணையின் போது, நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜனநாயக உரிமையை பாவித்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு 106 ஆம் பிரிவின் கீழ் காவல்துறையினரால் வழக்கு தொடர முடியாது என்பதையும் நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சொந்த பிணையில் செல்ல அனுமதி
எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கருத்திற் கொண்ட நீதவான் சந்தேக நபர்களை சொந்த பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening