ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த மார்ச் மாத கூட்டத் தொடர் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் தொடர்பில் மார்ச் மாதம் 4 ஆம் திகதி அமர்வின் போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அலிசப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழு
இதன் போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சமகால மனித உரிமைகள் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் சமர்பிக்கவுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழு ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈருருளிப் பயணக்குழு
இதேவேளை, ஜெனிவா கூட்டத்தொடரை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகள் ஊடாக நடத்தப்பட்டு வரும் ஈருருளிப்பயணம் 12 ஆவது நாளாகவும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்பயணத்தின் முடிவில் எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி ஐ நா திடல் முன்பாக இடம்பெறும் ஒன்றுகூடலிலும் ஈருருளிப் பயணக்குழு பங்கேற்கவுள்ளது.
சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படும் தமிழினத்தின் மீதான ஒடுக்கு முறைகளுக்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற விடயத்தை முதன்மை கோரிக்கையாக கொண்டு இந்த ஈருருளிப்பயணம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |