ஹெய்ட்டியின் தலைநகர் கூலிப்படை கைவசம்! ஜனாதிபதி சுட்டுப்படுகொலை
ஹெய்ட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் மீதமுள்ள சில சந்தேக நபர்களுடன் அதிகாரிகள் போராடி வருவதாகவும் காவல் துறைத் தலைவர் லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
லியோன் சார்லஸ் கொல்லப்பட்ட நான்கு பேரும் "கூலிப்படையினர்" என்று கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற 53 வயதான ஜோவெனல் மொய்ஸின் வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் புகுந்த கூலிப்டையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதன்போது ஜனாதிபதி மொய்ஸின் மனைவி மார்ட்டின் மொய்ஸ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு கூலிப்படையினர் கொல்லப்பட்டனர், இருவர் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று துறைத் தலைவர் லியோன் சார்லஸ் புதன்கிழமை தாமதமாக ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.