50 அடி பள்ளத்தில் புரண்டு விழுந்த கார்
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் ஒன்று வீதி விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலை தோட்டத்தில் புரண்டு விழுந்ததில், அதில் பயணித்த சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நுவரெலியா - ஹட்டன் வீதியில் தலவாக்கலை சென் கிளையார் தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை 1.30 அளவில் நந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகமாக சென்ற காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வரும் தலவாக்கலை பொலிஸார் கூறியுள்ளனர்.
வாகனத்தை செலுத்தி சாரதி, அதன் உரிமையாளர் எனவும் இதற்கு முன்னர் மது போதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய குற்றவாளி எனவும் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு இரத்துச் செய்து உத்தரவிட்டது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
