திடீரென மாயமான கதிர்காம ஆலயத்தின் பூசகர்! மகள் முறைப்பாடு
கதிர்காமம் ஆலயத்தின் தலைவர் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணாமல் போனதாகக் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் சிலர் நாளை (27) கதிர்காமம் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும் கதிர்காமம் காவல்நிலையித்தில் முறைபாடு செய்துள்ளனர்.
அதன்போது அவர்கள், தந்தை சமீபத்தில் தனது மூத்த சகோதரி ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், முறைப்பாட்டாளரும், பிரதிவாதிகளும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இன்று காவல் நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டனர்.
எனினும் நாளை கதிர்காமம் காவல் நிலையத்திற்கு வரவுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கை
எவ்வாறாயினும், பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போனதையடுத்து, ஆலயத்தின் தலைவர் பிரதான பூசகர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சம்பவத்தை விசாரணை செய்த குழுவினர், கதிர்காமம் ஆலயத்தின் களஞ்சியசாலை காப்பாளராக இருந்த சுட்டி கபுரல என்பவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.