கட்டுநாயக்காவில் சீன பிரஜையால் ஏற்பட்ட களேபரம்
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சீன பிரஜை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சீனப் பிரஜையிடம் சீன விமான அனுமதிப்பத்திரம் மற்றும் ஆபிரிக்க நாடான கினியாவிற்கு சொந்தமான விமான அனுமதிப்பத்திரம் இருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
விமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் சந்தேகம்
குறித்த சீனர் கடந்த 18ஆம் திகதி இரவு மேலும் இருவருடன் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சீன பிரஜையின் விமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் சந்தேகம் எழுந்தநிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரிடம் இருந்து மற்றுமொரு விமான அனுமதிப்பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சீன பிரஜையை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சீன நபர் விமான நிலையத்தில் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சீன பிரஜை விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
அமைச்சரின் தலையீடு
எனினும் இந்த சீன பிரஜை தனது அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடமைப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வந்தவர் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனவே குறித்த நபரை விடுதலை செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கடந்த 19ஆம் திகதி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் இராஜாங்க அமைச்சர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அமைச்சரின் கோரிக்கையை பரிசீலிக்கும் முன்னரே சீன பிரஜை விடுவிக்கப்பட்டதாக குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.