திருக்கோவில் பகுதியில் இளைஞர் மீது காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம்
திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நடந்தபோதும் இதுதொடர்பில் பொதுவெளியில் எந்த செய்திகளும் வெளிவந்திருக்காத நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்களூடாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபனிடம் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் எனவும் தமக்கு தகவல் கிடைத்துச் சென்று அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் காவல்துறையினர் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் காயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பில் எதுவித கருத்துக்களும் வெளிப்படுத்தப்படாமல் இரகசியமாக காணப்பட்ட நிலையில் இப்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எவ்விதமான கெட்ட பழக்கங்களும் அற்றவர்
26 வயது நிரம்பிய திருமணமான முச்சக்கர வண்டி ஓட்டுனரான குறித்த இளைஞன் காவல்துறையினர் கூறுவது போன்று எவ்விதமான பாவனையும், கெட்ட பழக்கங்களும் அற்றவர் என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்திருக்கின்ற நிலையில் பல கேள்வி வலுத்திருக்கிறது.

குறித்த இளைஞரை எந்த அடிப்படையில், எந்த சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்ய காவல்துறையினர் சென்றார்கள்? ஏன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது? அதுவும் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளும் எழும் நிலையில் இந்த விடையம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
எந்த அடிப்படையில் கைது செய்யச் சென்றார்கள்
இது தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், நீதிமன்ற அனுமதியோ அல்லது கட்டளையோ இல்லாமல் ஒரு நபரை எந்த அடிப்படையில் கைது செய்யச் சென்றார்கள்? அவ்வாறு சென்ற போது இயங்கு நிலையில் துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார்கள்? இவ்வாறு இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவரின் உடலில் பாய்ந்தது. ஏன் இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை? என்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இதன் பின்னணியில் இருப்பதாகக் கருதி நாளைய தினம்(22) மனித உரிமை ஆணையகத்திலே முறைப்பாடு ஒன்றை கையளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பான நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலே தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |