அமெரிக்காவின் சதி! அம்பலப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் - ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பரபரப்பு
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உட்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகாமை, டென்மார்க் இராணுவ புலனாய்வு சேவையின் ஒத்துழைப்புடன் டென்மார்க்கின் இன்டர்நெட் கேபிள்களை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை உளவுபார்த்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத் தகவலை முதல் முறையாக டென்மார்க்கின் அரசு ஊடகமான டி.ஆர். வெளியிட்டுள்ளது.
கடந்த 2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்' வாயிலாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உட்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக டி.ஆர். தெரிவித்துள்ளது. டென்மார்க் இராணுவ புலனாய்வு சேவையின் மீது நடந்த உள்நாட்டு விசாரணையின் போது, அமெரிக்க உளவு அமைப்பின் இந்த சதி அம்பலமானதாக கூறப்படுகிறது.
டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்'களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவை மற்றும் பிற செய்தி பகிர்வு சேவைகள் என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தவிர, அந்த நாட்டின் அப்போதைய வெளியுறவு மந்திரி பிராங்க்-வோல்டர் ஸ்டீன்மெயர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பீர் ஸ்டீன்பிரக் ஆகியோரையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனி மட்டுமின்றி சுவீடன், நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் அமெரிக்காவின் இந்த உளவு நடவடிக்கையில் இலக்காக இருந்ததாக டி.ஆர். தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்கா மற்றும் டென்மார்க் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் டென்மார்க் இராணுவ புலனாய்வு சேவை ஆகியவை உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான், “நட்பு நாடுகளுக்கு இடையில் இது ஏற்கத்தக்கது அல்ல. இது தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்” என கேட்டுக்கொண்டுள்ளார். அ
வருடனான பேச்சுக்களின் போது, மெக்ரானின் வார்த்தைகளுக்கு தான் உடன்படுவதாக ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.