காவல்துறை உத்தியோகத்தரின் மோசடி அம்பலம்
காவல்துறைக்கு சொந்தமான பேருந்தின் பழைய டயருக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட புதிய டயரை மீன் ஏற்றிச் செல்லும் லொறியின் சாரதிக்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் குருநாகல் தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் சாரதி நேற்றையதினம் (17) பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குருநாகல் காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நடத்திய ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் காவல்துறை கான்ஸ்டபிளான சாரதியை பணி இடைநீக்கம் செய்தார்.
மீன் வியாபாரிக்கு விற்கப்பட்ட டயர்
புதிதாக கொண்டு வரப்பட்ட டயரை திருகோணமலை பகுதியில் உள்ள மீன் லொறி சாரதி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், காவல்துறை பேருந்தில் இருந்து பழைய டயர் அகற்றப்பட்டு நிரப்பப்பட்ட டயரை மாற்றியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
விசாரணையில் வௌியான தகவல்
குருநாகல் மாவட்டப் பொறுப்பதிகாரி அனில் பிரியந்தவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநாகல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று களமிறக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பதிநாயக்கவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், குருநாகல் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அனில் பிரியந்தவின் ஆலோசனையின் பேரில், குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் நடவடிக்கையின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
