கோட்டாபய-மஹிந்த கட்சிக்குள் உருவெடுத்துள்ள உக்கிரநிலை- வியூகம் வகுக்கும் விமல் அணி!
கொழும்பின் புறநகரான கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆளுங்கட்சிக்குள் உருவெடுத்துள்ள நெருக்கடி உக்கிரநிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் ஆளுங்கட்சியிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர், இந்த வார இறுதியில் கொழும்பில் மாபெரும் சந்திப்பை நடத்த உத்தேசித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்புக்கு அருகே உள்ள கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன.
இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின் கீழ் பகிரங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் 10 கட்சிகள் தயாராகி வருகின்றன.
யுகதனவி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்த விடயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் வியூகம் வகுத்துள்ளனர்.