வங்கியில் வைப்பிலிட கொண்டு சென்ற இலட்சக்கணக்கான பணத்துடன் சாரதி தப்பியோட்டம்
அவிசாவளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட கொண்டு செல்வதற்காக வானில் வைக்கப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிக்கொண்டு தலைமறைவான வாகன சாரதி அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவிசாவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சாரதி பணிக்கு வந்து 15 நாட்களாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையின் உடனடி செயற்பாடு
சந்தேகநபருடன் திருடப்பட்ட சுமார் முப்பது இலட்சம் பணம், பணம் வைத்திருந்த பை, இரண்டு கைத்தொலைபேசிகள், நான்கு காசோலைகள் மற்றும் அந்த பணத்தில் அவர் வாங்கிய துணிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சாரதியுடன் சேர்ந்து திருட்டுக்கு உதவியதாகக் கூறப்படும் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட சாரதி
கடந்த மாதம் 26 ஆம் திகதி அவிசாவளை ரன்வல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் காசாளர் ஒருவர் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல காசோலைகளை இரண்டு பைகளில் வைத்து வங்கியில் வைப்பதற்காக கப் ரக வாகனத்தில் வந்த போது சாரதி சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு தனியார் வங்கிக்கு வந்து, ஒரு பகுதியை வண்டியில் வைத்துவிட்டு காசாளர் சாரதியை அழைத்து, பின் சீட்டில் பணப் பை இருப்பதாகவும், விரைவில் வருவதாகவும் கூறியதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் காசாளர் வாகனத்திற்கு வந்தபோது சாரதியும் பணப் பையும் காணாமல் போனதைக் கண்டு காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
YOU MAY LIKE THIS
