2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அரச வருமானத்தில் புதிய சாதனை
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வருடமொன்றுக்கு மூன்று இலட்சத்து பதினோராயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவை (3115 பில்லியன்) அரசாங்கம் வருமானமாக ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டிலேயே (2023) இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அரச வருமான வரலாற்றில் ஒரு வருடத்தில் கிடைத்த அதிகூடிய வருமானம் இதுவெனவும், அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் மூன்று இலட்சம் கோடி ரூபாவைத் (மூன்று டிரில்லியன்) தாண்டியது இதுவே முதல் முறை எனவும் அதிபர் அலுவலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
வரி வருவாய்
இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அரசின் வரி வருவாயிலிருந்து, வட்டிச் செலவுகளைத் தவிர மற்ற செலவினங்களைச் சமாளிக்க முடிந்துள்ளது.
இதன்படி, இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கில் 52 பில்லியன் ரூபா சமநிலையை பதிவு செய்வதும் சாத்தியமாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு 2752 பில்லியன் ரூபா வரி வருமானமும், வரி அல்லாத வருமானமாக 363 பில்லியன் ரூபாவும் பெறப்பட்டு மொத்த வருமானமாக 3115 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1550 பில்லியன் ரூபாவையும் இலங்கை சுங்கம் 970 பில்லியன் ரூபாவையும் கலால் திணைக்களம் 170 பில்லியன் ரூபாவையும் வசூலித்துள்ளன.
மூன்று பிரதான திணைக்களங்களுக்கு மேலதிகமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் அரசாங்கத்திற்கு மானியங்களை வழங்கும் நிறுவனங்களின் நிதி அதிகரிப்பு அரச வருமானத்தின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
அரசாங்கத்தின் மொத்த வருமானம்
2022ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2013 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதில் 1751 பில்லியன் ரூபா வரி வருமானமாக உள்ளது. மீதமுள்ள 262 பில்லியன் ரூபாய்கள் வரி அல்லாத மற்றும் மானியங்களாக உள்ளன.
அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ள அதேவேளை, 2023ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவினங்களும் 5252 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.” என பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |